கண்ணியமில்லா ஒளிபரப்பு!
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் (9/11) தகர்க்கப்பட்ட சமயத்தில், பல மேற்கத்திய டிவி சேனல்கள், உயிரிழப்பைப் படம் பிடித்துக் காட்டியபோது, ஓரளவு கண்ணியத்தை கடைபிடித்தன. பார்ப்போரை, குறிப்பாக, சிறுவர் சிறுமியரை பாதிக்கக்கூடிய காட்சிகளை அந்த ஊடகங்களே தடை செய்தன. ஒருவர், எரிகின்ற கட்டடத்திலிருந்து, தன் சாவை நோக்கி, குதிக்கும் ஒரு காட்சியைத் தவிர, கண்டிக்கத்தக்க வகையில் வேறெதையும் குறிப்பிட இயலாது.
ஆனால், தமிழ்நாட்டில் சுனாமி நிகழ்த்திய பேரழிவுக்குப் பின், ஒளிபரப்பில் கண்ணியம் என்ற பேச்சுக்கே இடமில்லை! வரைமுறையற்ற வகையில், காட்சிகள் ஊடகங்களில் ஒளிபரப்பப் பட்டன. கண்ணியமற்ற வகையில், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பெருஞ் சோகங்களை, அவர்களின் உணர்வுகளுக்கு சிறிதும் மதிப்பளிக்காமல், படம் பிடித்து பட்டவர்த்தனமாக ஒளிபரப்பியது, வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று! சடலங்களைக் காட்டுவதிலும் ஒரு நெறிமுறை வேண்டாமா? சன் நியூஸ் தொலைக்காட்சியில் கடந்த 5 நாட்களாக இது வாடிக்கையாக நடந்து வந்தது, பார்க்கக் கொடுமையாக இருந்தது.
இக்காட்சிகளை கண்கூடாகப் பார்த்தால் தான், பொதுமக்கள் உதவி செய்வார்கள் என்று ஊடகங்களே கற்பனை செய்து கொண்டு, இறந்தவர்களையும், மிகுந்த பாதிப்புக்கு உள்ளானவர்களையும், பார்ப்போரையும், கேவலப்படுத்தும் செயல் இது. நம்மூர்க்காரர்கள் படம் பிடித்து அனுப்பிய இம்மாதிரி காட்சிகள், BBC, CNN போன்ற அயல்நாட்டு சேனல்களிலும் தாராளமாக ஒளிபரப்பாயின. இந்நிலை இந்தியருக்குத் தான் என்றல்ல, இலங்கை மற்றும் இந்தோனேசியாவில் உயிரிழந்தவர்களுக்கும் இதே கதி தான்!
சுனாமியால் இறந்தவர்களின் சடலங்களை ஏதோ சந்தைப் பொருட்களைப் போல் படம் பிடித்துக் காட்டுவது சுத்த கண்ணியமற்ற செயலோடு, இறந்தவருக்குச் செய்யும் அவமரியாதையும் ஆகும். இவ்வாறு காட்டிய மறுநிமிடமே, 'அப்படிப்போடு, போடு!' என்ற ஒரு கூத்தடிக்கும் பாடலை ஒளிபரப்புவதை விடக் கேவலம்/அபத்தம் வேறொன்றும் கிடையாது! வியாபார நோக்கிற்கு, இத்தகைய சூழ்நிலையில், ஒரு நெறிமுறை வகுத்துக் கொள்வது அவசியம். இதைப் பற்றியெல்லாம் இங்கே ஒருவருக்கும் அக்கறை இருப்பதாகத் தோன்றவில்லை.
ஏதோ ஒரு டிவி சேனலின் ஒளிப்பதிவாளர், உறவினர்களை இழந்து கதறியழும் பெண்களை, வரிசையாக அமர்ந்தால் தான் படம் பிடிக்க வசதியாக இருக்கும் எனக் கூறினாராம்! இன்னொருவர், சுனாமியால் இந்தியாவின் மக்கள்தொகை குறைந்தால் நல்லது தானே என்றாராம். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நம்மூரில், பொதுவாக, ஏழைகளின் உயிர்களுக்கு மதிப்பு இல்லை என்பதே நிதர்சனம்.
தற்போது நிகழ்ந்தது போல், சுனாமியால், எதிர்காலத்தில் பேரழிவு நிகழாமல் தடுக்க, அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இவற்றையெல்லாம் விட, மிக அவசியமானது, பெரும்பாலான (90%) அரசாங்கத் திட்டங்கள், ஏழை எளியவர்களின் நலன் குறித்து அமைவதும், அத்திட்டங்களின் முழுப்பயன்கள் அவர்களை சரியாகச் சென்றடைவதும் தான்! அதே போல், எந்த ஒரு நாட்டில், சுனாமி/பூகம்பம் போன்றவைகளால் பாதிப்பு இல்லாத சூழலிலும், வசதி படைத்த மக்கள், வறுமையில் உழலும் நலிந்த ஏழை எளியவர்களையும், முதியவர்களையும், அரவணைத்து, ஆதரித்து, அன்னாரின் பாதுகாப்பான வாழ்வுக்கு தங்களால் இயன்றதைச் செய்வதை தேசியக் கடமையாக எண்ணுகிறார்களோ, அந்நாட்டு மக்கள் யாவரும் கவலையின்றி நலமாக வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.
என்றென்றும் அன்புடன்
பாலா
4 மறுமொழிகள்:
சரியாயச் சொன்னீங்கள் பாலா. இது விடயத்தில் எனக்கும் நிறையவே அதிருப்தி இருந்தது. அவலங்களின் மூலம் தங்களை வளர்த்துக் கொள்ள ஊடகங்கள் முனைகின்றன.
ஹும்.. பிணம் திண்ணிக் கழுகுகள்
http://tamil.kparthas.com/archives/2004/12/aaaaaaaa.html
http://tamil.kparthas.com/archives/2004/12/aaaaaaaa.htmlல் கண்ணன் சொல்வது போல அவர்களெல்லாம் பிணம் திண்ணிக் கழுகுகள் பாலா! வேறென்ன எதிர்பார்க்க முடியும் அவர்களிடத்தில்!
100% true, a Censor for TV is badly needed
Post a Comment